உள்ளூர் செய்திகள்

காத்திருக்கு வெகுமதி

மலருக்கு மணம் அழகு. பெண்ணிற்கு நாணம் அழகு. அதுபோல் மொழிக்கு உவமை அழகு. அதாவது உவமையின் நோக்கம் மொழி இன்பத்தை சுவைப்பது மட்டுமல்ல. அதில் பொதிந்து உள்ள உண்மையை உணர வேண்டும் என்பதே. நபிகள் நாயகமும் உவமையை கையாண்டுள்ளார்.தான் இறைத்துாதராக அனுப்பப்பட்டதன் நோக்கம் குறித்தும், தன் பணி என்ன என்பது பற்றியும் உவமையாக சொல்கிறார். இதோ...* மன்னர் ஒருவர் அழகான மாளிகையைக் கட்டி அதில் விருந்திற்கும் ஏற்பாடு செய்தார். மக்களை விருந்திற்கு அழைக்கும்படி ஒரு துாதரையும் அனுப்பினான். அதை ஏற்று விருந்தை புசித்தவர்கள் வெகுமதிகளை பெற்றனர். அதைப் பெற மறுத்தவர்கள் மன்னரின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது. அது போல இறைவனுக்கு பயந்து நற்செயல்களை செய்பவர்கள் சொர்க்கத்தில் நுழைவர். செய்யாதவர்கள் நரகத்திற்கு செல்வர். * நெருப்பு எரிகிறது. பூச்சிகள் அதற்குள் விழுந்து இறக்கின்றன. ஒருவர் ஓடி வந்து பூச்சிகள் நெருப்பிற்குள் விழாமல் தடுக்கிறார். நான் அந்த மனிதருக்கு ஒப்பாவேன். நரக நெருப்பில் விழுந்திடாமல் காப்பாற்றப் பாடுபடுகிறேன். ஆனால் நீங்களோ என் கைகளை தட்டி விட்டுச் செல்கிறீர்கள்.