உள்ளூர் செய்திகள்

நான்கு வகை படைப்பு

இறைவன் முதன் முதலாவதாக நான்கு வகையான படைப்புகளைப் படைத்தான். முதலில் ஒளியையும் அதிலிருந்து ஆத்மாவையும், பிறகு எழுதுகோலையும், அடுத்து அறிவையும் படைத்தான். முதலாவதாகப் படைக்கப்பட்ட ஒளி நுாரே முஹம்மதீ என அழைக்கப்படுகிறது. இந்த ஒளியின் பொருட்டால்தான் அண்ட சராசரங்கள் அனைத்தையும் அவன் படைத்துள்ளான். ஹஜ்ரத் அபூ மூஸா மதனீ (ரஹ்) கூறுகிறார்:'நுாரே முஹம்மதீ' என்ற ஒளியைப் படைத்த பிறகு ஒன்பது லட்சம் வருடங்களுக்குப் பிறகுதான் மற்ற படைப்புகளைப் படைத்தான். தன்னை ஸஜ்தா செய்யுமாறு அந்த ஒளிக்கு ஆணையிட்டான். அது நுாறு வருடங்கள் வரை அவனை ஸஜ்தா செய்த வண்ணமே இருந்தது. ஒரு வருடம் என்பது உலக வருடக் கணக்கிற்கு ஆயிரம் வருடங்களுக்குச் சமம். இந்த ஒளியின் ஒரு பகுதியைக் கொண்டு தான் அவன் தன்னுடைய ஆசனமான அர்ஷைப் படைத்தான். இந்த 'அர்ஷ்' நான்காயிரம் துாண்கள் மீது அமைக்கப்பட்டது. ஒரு துாணுக்கு ஒரு துாணின் இடைவெளி நான்காயிரம் வருடங்கள் நடைப் பயணம் செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.