வேறு பங்களா கிடைக்குமா?
'தேர்தலில் வெற்றி பெற்றும் துரதிர்ஷ்டம் துரத்துகிறதே...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குறித்து கவலையுடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள். கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், டில்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார்.மோடி சமூகத்தினர்குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் அவருக்குதண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து, எம்.பி.,பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்; இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்தார். டில்லியில் தன் தாய்சோனியா வசிக்கும் ஜன்பத் சாலை வீட்டுக்கு மாறினார். மேல் முறையீட்டில் அவருக்கு எம்.பி., பதவி திரும்ப கிடைத்தபோதும், அவரது அரசு பங்களா கிடைக்கவில்லை. தற்போது லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவராகவும் மாறி விட்டார்.இதனால், மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் அரசு பங்களா, இவருக்கும் ஒதுக்கப்பட வேண்டும். இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தரப்பட்டிருந்த பங்களா ராகுலுக்கு ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் இந்த பங்களாவை பார்வையிட சென்ற ராகுலை சந்தித்த ஒருவர், 'இது, ஏற்கனவே மயானம் இருந்த பகுதி. அங்கு தான் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது...' என, அணுகுண்டு வீசினார். அதிர்ந்து போன ராகுல், 'வேறு பங்களா பார்க்கலாம். அதுவரை என் தாய் வீட்டிலேயே வசிக்கிறேன்...' என கூறி, வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்.