உள்ளூர் செய்திகள்

வளர்த்த கடா!

'மாமன், மச்சான் என கூறி உதவி தேடி வருபவர்களை இனி பக்கத்திலேயே சேர்க்கக் கூடாது...' என, எரிச்சலுடன் கூறுகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்து, தன் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார், லாலு பிரசாத் யாதவ். ஆனால், அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வேலையை, அவரது உறவினர்களே ஜோராக செய்து வருகின்றனர். லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் சகோதரர் சுபாஷ் யாதவ், சமீபத்தில் ஒரு அணுகுண்டை துாக்கி வீசினார்...'லாலு பிரசாத் ஏற்கனவே முதல்வராக பதவி வகித்தபோது, ஆட்களை கடத்தி செல்லும் மாபியா கும்பல்களுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தார். 'ஆள் கடத்தல் வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரிக்கப்படுவதற்கு பதிலாக, முதல்வர் அலுவலகத்தில் தான் விசாரிக்கப்பட்டன. இந்த மறைமுக பேரத்தில் லாலுவுக்கு பணம் கொட்டியது. இதற்கெல்லாம் நானே நேரடி சாட்சி...' என, அவர் தெரிவித்தார். இதனால் கடுப்பான லாலு, 'சொந்தக்காரர்கள் என்று அரவணைத்தது தவறு என்பது இப்போது தான் தெரிகிறது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக இருக்கிறது...' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை