தலைவர் பதவி கிடைக்குமா?
'அரை டஜனுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பெரும் கனவுடன் காத்திருக்கின்றனர். யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறதோ...' என, எதிர்பார்ப்புடன் உள்ளனர், பா.ஜ., நிர்வாகிகள். தற்போது, பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்டது. உட்கட்சி தேர்தல் நடப்பதால், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எப்படியும், அடுத்த சில வாரங்களுக்குள் பா.ஜ.,வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும். மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், அவர் மத்திய அமைச்சராக இருப்பதால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இருந்தாலும், சிவ்ராஜ் சிங் சவுகான் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா ஆகியோரும் தலைவர் பதவிக்கான பந்தயத்தில் உள்ளனர். ஆனாலும், ஹரியானா முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மனோகர்லால் கட்டாருக்கு தான், தலைவராவதற்கு வாய்ப்பு அதிகம் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. 'ஆர்.எஸ்.எஸ்., ஆதரவும் அவருக்கு உள்ளதால், அவருக்கு நாற்காலி உறுதி' என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். அதே நேரத்தில், 'கட்டார், அதிகம் நம்பிக்கை வைக்க வேண்டாம். வழக்கம்போல், யாரும் எதிர்பாராத வகையில் புதுமுகத்துக்கு பா.ஜ., மேலிடம் அந்த வாய்ப்பை வழங்கலாம்...' என, விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.