கடைக்கண் பார்வை!
'தேர்தல் நெருங்கி விட்டாலே, வீட்டிற்குள் பதுங்கி கிடந்த அரசியல்வாதிகள் வீதிக்கு வந்து விடுவர்...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான விஜய் கோயல் பற்றி பேசுகின்றனர், டில்லியில் உள்ள மக்கள். விஜய் கோயல்,பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்; டில்லியைச் சேர்ந்தவர். அங்கு, இவருக்கு ஓரளவுக்கு செல்வாக்கும் உள்ளது.இவர், லோக்சபா எம்.பி.,யாக இருந்தபோது, டில்லி மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.சில ஆண்டுகளாகவே பா.ஜ.,வில் இவருக்கு பெரிய முக்கியத்துவம்எதுவும் இல்லை. இதையறிந்து அவரும் ஒதுங்கியே இருந்தார். அடுத்த சில மாதங்களில், டில்லியில்சட்டசபை தேர்தல்நடக்கவுள்ளது. 'இங்கு நாம் வெற்றி பெற்றால், உங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புஉள்ளது...' என, விஜய் கோயலை, அவரது ஆதரவாளர்கள் உசுப்பேற்றி விட்டுள்ளனர். இதனால், திடீரென மீண்டும் தீவிர அரசியலுக்குள்குதித்துள்ளார், விஜய் கோயல். டில்லி ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளை கண்டித்து, தினந்தோறும்தன் ஆதரவாளர்களுடன் போராட்டம், மறியல் போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார். போராட்டங்களுக்கு கூட்டம் குறைவாக வந்தாலும், அதை பற்றி கவலைப்படாமல், 'நமக்கு விளம்பரம் தான் முக்கியம். கட்சி மேலிடத்தின் கடைக்கண் பார்வை படும் வரை, இது போன்ற வேலைகளை செய்ய வேண்டியது தான்...' என, நகைச்சுவையாக பேசுகிறார் விஜய் கோயல்.