இவ்வளவு அவசரப்படணுமா?
'தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டு இருக்கிறது. அதற்குள் இவ்வளவு அவசரப்படுகிறாரே...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நடவடிக்கைகளைபார்த்து ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், 99 தொகுதி களில் வெற்றி பெற்றது, ராகுலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், மிகக் குறைவான தொகுதிகளில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்ததுடன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தும் ராகுலுக்கு கிடைத்து விட்டது. இதையடுத்து, 2027ல் நடக்கவுள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு இப்போதே கவனம் செலுத்தத் துவங்கி விட்டார். இதற்காக அடிக்கடி உ.பி.,க்கு, 'விசிட்' அடித்து வருகிறார். சமீபத்தில், ரேபரேலி தொகுதிக்கு சென்ற ராகுல், அங்கு சாலையோரத்தில் உள்ள சலுான் கடைக்கு சென்று முடி திருத்தினார்; சலுான் உரிமையாளருக்கு சில நாற்காலிகளையும் வாங்கிக் கொடுத்தார். சுல்தான்பூருக்கு சென்றபோது, செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கலந்துரையாடியதுடன், அவரது தொழிலுக்கு தேவையான உதவிகளையும் செய்தார். இதைப் பார்த்த சக அரசியல்வாதிகள், 'நேற்று நடந்த விஷயமே இன்று ஞாபகத்துக்கு வருவது இல்லை; மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். ஆனால் ராகுலோ, மூன்று ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் தேர்தலுக்கு இப்போதே அவசரப்படணுமா...' என, கிண்டல் அடிக்கின்றனர்.