'செல்வாக்குடன் பீஹாரை ஆட்சி செய்த நமக்கா இந்த கதி...' என கண்ணீர் வடிக்கிறார், அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ரப்ரி தேவி. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, லாலு பிரசாத் யாதவ், முதல்வர் பதவியை தொடர முடியாத நிலையில், 1997 - 2005 வரை ரப்ரி தேவி முதல்வராக பதவி வகித்தார்; அதன்பின், அவர் ஆட்சியை இழந்தாலும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது, முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், பீஹார் தலைநகர் பாட்னாவில் அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. கடந்த, 20 ஆண்டுகளாக ரப்ரி தேவி, தன் கணவர் லாலு மற்றும் மகன்களுடன் இந்த பங்களாவில் தான் தொடர்ந்து வசித்து வந்தார். இந்நிலையில், 'முன்னாள் முதல்வர்கள் என்ற காரணத்துக்காக, யாரும் அரசு பங்களாவில் வசிக்க முடியாது...' என, பீஹார் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காரணம் காட்டி, தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு, பங்களாவை காலி செய்யும்படி, ரப்ரி தேவிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை தவிர்ப்பதற்காக, ரப்ரி தேவி என்னென்னவோ செய்து பார்த்தார்; எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, 20 ஆண்டுகளாக வசித்து வந்த பங்களாவில் இருந்து, சமீபத்தில் பெட்டி, படுக்கைகளுடன் கண்ணீர் மல்க வெளியேறினார் ரப்ரி. 'ஆட்சி, அதிகாரத்தில் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்குமா...' என, தன் ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறார், ரப்ரி தேவி.