உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ஓட்டு கேட்க முடியுமா?

ஓட்டு கேட்க முடியுமா?

'நடிகையருக்கு, 'சீட்' கொடுக்க வேண்டாம் என கெஞ்சி கேட்டோம்; கட்சி மேலிடம் எங்கள் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. இப்போது அதற்குரிய பலன் கிடைத்து விட்டது...' என, பிரபல நடிகையும், லோக்சபா எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் குறித்து கவலை யுடன் பேசுகின்றனர், ஹிமாச்சல பிரதேச மாநில பா.ஜ., தொண்டர்கள். ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் கங்கனா. தமிழிலும், தாம் துாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அங்குள்ள மண்டி தொகுதியில் போட்டியிட, பா.ஜ., மேலிடம் வாய்ப்பு அளித்தது. அதற்கு அப்போதே அங்குள்ள பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, 'கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்...' என்றனர். ஆனாலும், அந்த தொகுதியில் போட்டியிட்டு கங்கனா வெற்றி பெற்றார். தனக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என நினைத்தார். அதுபோல் எதுவும் நடக்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருக்கிறார்.சமீபத்தில், அவரது மண்டி தொகுதியில் பலத்த மழை பெய்து, நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது; ஆனால், கங்கனா அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'இயற்கை பேரிடர் ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்கு மாநில அரசு உள்ளது; இதில், நான் என்ன செய்ய முடியும்?' என, எதிர்கேள்வி எழுப்பினார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஹிமாச்சல் பா.ஜ.,வினர், 'இவரை போன்றவர்களை வைத்துக் கொண்டு, மக்களிடம் எப்படி ஓட்டு கேட்க முடியும்...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி