| ADDED : ஆக 19, 2024 12:10 AM
'இது திட்டமிட்ட சதி...' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா உத்தவ் பிரிவு தலைவருமான உத்தவ் தாக்கரே.மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பருடன் முடிவடைகிறது. ஹரியானா சட்டசபையின் காலமும், நவம்பருடன் தான் முடிவடைகிறது. சட்டசபை பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே, தேர்தல் நடத்தப்படும். ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேதி அறிவிக்கப்படுவது பல ஆண்டுகளாகவே வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்த முறை, ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை மட்டும் அறிவித்த தேர்தல் ஆணையம், மஹாராஷ்டிராவுக்கு பின் அறிவிக்கப்படும் என கூறிவிட்டது. ஜம்மு - காஷ்மீருக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக மஹாராஷ்டிராவுக்கு இப்போது தேதி அறிவிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.ஆனால் உத்தவ் தாக்கரே, 'சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணி தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சிக் கூட்டணி தோல்வியை சந்தித்தது. தோல்வி பயம் காரணமாகவே, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஏதேதோ காரணத்தை கூறுகின்றனர்...' என்கிறார்.பா.ஜ.,வினரோ, 'மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதே இவருக்கு வேலையாகி விட்டது...' என்கின்றனர், கோபமாக.