‘திருந்தவே மாட்டாரோ?’
‘நேரம், காலம், எல்லாம் பார்த்து வீணாகப் போனாலும், தன் முடிவை மாற்றாமல் பிடிவாதமாக இருக்கிறாரே...’ என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குறித்து கூறுகின்றனர், அம்மாநில மக்கள். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், 2012 – 17ல், முதல்வராக பதவி வகித்தார். அப்போது, ஜோதிடத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஜோதிடர்கள் சொல்வதை வேதவாக்காக பின்பற்றினார். ‘உ.பி., யின் முக்கிய நகரமான நொய்டாவுக்கு சென்றால், முதல்வர் பதவி பறிபோய் விடும்’ என ஜோதிடர்கள் கூறியதை கேட்டு, முதல்வராக இருந்த ஐந்தாண்டுகளும், நொய்டா பக்கமே அவர் தலைகாட்டவில்லை. ஆனாலும், 2017 மற்றும் 2022ல் நடந்த சட்டசபை தேர்தல்களில், சமாஜ்வாதி படுதோல்வி அடைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக, சமாஜ்வாதி எதிர்க்கட்சியாகத் தான் இருக்கிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில், மீண்டும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்கத் துவங்கியுள்ளார், அகிலேஷ் யாதவ். ஜோதிடர்கள் குறித்து கொடுக்கும் நேரத்தில், பிரசாரத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட உ.பி., மக்கள், ‘அகிலேஷ் யாதவ் திருந்தவே மாட்டார் போலிருக்கிறதே...’ என, கிண்டல் அடிக்கின்றனர்.