'முதல்வராக பதவியேற்றும் அதிகாரிகளிடையே இன்னும் நமக்கு பயம், மரியாதை இல்லையே...' என முணுமுணுக்கிறார், ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால் சர்மா.இங்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவியை பெறுவதற்கு, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட பலர் முட்டி மோதினாலும், இறுதியில், புதுமுகமான பஜன்லால் சர்மாவுக்கு தான் அந்த யோகம் அடித்தது.ஜெய்ப்பூரில் உள்ள அரசு குடியிருப்பில் தான், முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்களுக்கு வீடு ஒதுக்கப்படும். இதற்கு முன் முதல்வராக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த அசோக் கெலாட் குடியிருந்த வீடு தான், தற்போது பஜன்லால் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அசோக் கெலாட், இன்னும் வீட்டை காலி செய்யவில்லை. முன்னாள் முதல்வர் என்பதால், வீட்டை காலி செய்யும்படி கறாராக உத்தரவிட அதிகாரிகள் தயங்குகின்றனர். இதனால், பஜன்லால் சர்மாவிடம், 'இன்னும் சில நாட்களுக்கு பொறுத்திருங்கள்; அதற்குள் ஏற்பாடு செய்து விடுகிறோம்...' என, கூறி வருகின்றனர். இதனால், தற்போதைக்கு ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தான் பஜன்லால் சர்மா தங்கியுள்ளார். 'முன்னாள் முதல்வருக்கு பயப்படும் அதிகாரிகள், தற்போதைய முதல்வருக்கு பயப்பட மறுக்கின்றனரே...' என, அப்பாவியாக கூறுகிறார், பஜன்லால் சர்மா.