வேண்டுதல் பலிக்குமா?
'எப்போதும் இல்லாத வகையில், இப்போது என்ன ஆன்மிக விஷயத்தில் ரொம்பவே உணர்ச்சி வசப்படுகிறார்...' என, மேற்கு வங்க முதல்வரும்,திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி பேசுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.மம்தா பானர்ஜி,எப்போதுமே ஹிந்து மதம் சார்ந்தவிவகாரத்தில் சற்று அடக்கி வாசிப்பார். 'சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக ஹிந்துக்கள் விஷயத்தில் பாரபட்சம் காட்டுகிறார்...' என, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுவது உண்டு.ஆனால், இந்தாண்டுதுர்கா பூஜையை, கோல்கட்டாவில் உள்ள தன்வீட்டில் மிகவும் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடினார், மம்தா. அமைச்சர்கள், அதிகாரிகள், விருந்தினர்கள் என பலரையும் அழைத்து, துர்கா பூஜையை கொண்டாடியமம்தா, துர்க்கை சிலை முன், நீண்ட நேரம் கை கூப்பி மனம் உருக வேண்டினார். அங்கு வந்திருந்தவர்கள் இதைப் பார்த்து, 'இதற்கு முன், இப்படி மனம் உருகி, அவர் பிரார்த்தனை செய்து பார்த்ததே இல்லையே...' என, ஆச்சரியப்பட்டனர்.'அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல்பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம், விஸ்வரூபம் எடுத்துள்ளது அல்லவா; இந்த விவகாரத்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான், மனம் உருக வேண்டினார் போலிருக்கிறது...' என கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.