நல்லவரா, கெட்டவரா?
'இப்படிப்பட்டவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்தால், கட்சி நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்...' என, முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யுமான யூசுப் பதான் பற்றி, அந்த கட்சியின் நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். யூசுப் பதான், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளை யாடி ஓய்வு பெற்றவர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவரை, கடந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில், 'சீட்' கொடுத்து வெற்றி பெற வைத்தார், அந்த மாநில முதல்வரும், திரிணமுல் தலைவருமான மம்தா பானர்ஜி. யூசுப் பதான், குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில், தன் வீட்டுக்கு அருகே உள்ள அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போது, அரசு நிலத்தை ஆக்கிரமித்ததை ஒப்புக்கொண்ட யூசுப் பதான், முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால், தனக்கு அந்த நிலத்தை அரசு விட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், 'பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல...' என, தெரிவித்தது. இந்த விவகாரம், திரிணமுல் காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'ஒருவரை கட்சியில் சேர்ப்பதற்கு முன், அவர் மீது வழக்குகள் உள்ளனவா; அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை விசாரியுங்கள். கண்களை மூடிக்கொண்டு பதவி கொடுக்காதீர்கள்...' என, மம்தாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர், அவரது கட்சி நிர்வாகிகள்.