உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / பயம் வந்துடுச்சு!

பயம் வந்துடுச்சு!

'காங்கிரசை எதிர்க்கட்சியாக பார்த்த நிலை மாறி, இப்போது பா.ஜ.,வை எதிரியாக பார்க்கத் துவங்கி விட்டார்...' என, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனை கிண்டல் அடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள். கேரளாவில், மா.கம்யூ., - காங்., கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. சமீப காலமாக, இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக, பா.ஜ., உருவெடுத்து வருகிறது. 'கேரளாவில் பா.ஜ., கால் பதிக்கவே முடியாது...' என, இந்த இரு கட்சியினரும் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி அபார வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை, காங்கிரசை மட்டுமே தங்கள் பிரதான எதிரியாக கருதி வந்த, முதல்வர் பினராயி விஜயன், இப்போது, பா.ஜ.,வின் வளர்ச்சியை பார்த்து கலக்கம் அடைந்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், 'பா.ஜ.,வுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு ஓட்டும், கேரள மாநில கலாசாரத்தை அழிப்பதற்கு போடப்படும் ஓட்டு என்பதை, மக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்...' என, ஆவேசப் பட்டுள்ளார். பா.ஜ.,வினரோ, 'கேரளாவில் பா.ஜ.,வால் கால் பதிக்க முடியாது என கூறி வந்த பினராயி விஜயன், இப்போது, 'பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாதீர்கள்' என கூறுகிறார். அப்படியானால், எங்களை பார்த்து அவருக்கு பயம் வந்து விட்டது என்றுதானே அர்த்தம்...' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !