உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  துாக்கம் வராது போலும்!

 துாக்கம் வராது போலும்!

'தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப் போகின்றனவோ...' என்கின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள். இங்கு, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாதம், 23 மற்றும் 29 தேதிகளில், இங்கு இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. மம்தா பானர்ஜிக்கும், மேற்கு வங்கத்தில் கவர்னராக இருப்போருக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இங்கு கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கருடன், பல விஷயங்களில், மம்தா மோதல் போக்கை பின்பற்றினார். இருவருக்கும் ஏற்பட்ட மோதல், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியான பின், சி.வி.ஆனந்த போஸ் என்பவர், மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார்; அவருடனும் மம்தா, கடுமையாக மோதினார். இதனால், ஆனந்த போஸ், சமீபத்தில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மம்தாவின் கவனம், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நோக்கி திரும்பியுள்ளது. 'ஞானேஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார். தகுதி வாய்ந்த வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறார்...' என்று, தினமும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார், மம்தா. மேற்கு வங்க மக்களோ, 'மம்தாவுக்கும், சண்டைக்கும் அவ்வளவு பொருத்தம் இருக்கிறது. அவருக்கு, யாருடனாவது சண்டை போடாமல் இருந்தால் துாக்கம் வராது போலிருக்கிறது...' என்று, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை