ஆரோக்கியமான விஷயம்!
'எதிர்பார்த்த விஷயத்தில் கிடைக்காத சந்தோஷம், எதிர்பார்க்காத விஷயத்தில் கிடைத்து விட்டது...' என உற்சாகத்துடன் கூறுகிறார், உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் படேல். கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது, அவர் வகித்து வந்த குஜராத் முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. குஜராத் மாநில பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்திபென் படேலுக்கு முதல்வர் பதவி கிடைத்தது. குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்தப் பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என, ஆனந்திபென் விரும்பினார். ஆனாலும், அரசியல் சூழல்கள் மாறியதால், இரண்டு ஆண்டுகளிலேயே, அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதையடுத்து, 2019ல் உ.பி., கவர்னராக நியமிக்கப்பட்ட அவர், ஏழு ஆண்டுகளாக அந்தப் பதவியில் நீடிக்கிறார். உ.பி., கவர்னராக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர் என்ற பெருமையும், ஆனந்திபென்னுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில், தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள், நண்பர்களை அழைத்துப் பேசி, இந்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டார். 'கிடைக்காததை நினைத்து வருத்தப்படுவதை விட, கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுவது ஆரோக்கியமான விஷயம் தான்...' என, ஆனந்திபென் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.