உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / மாதத்துக்கு ஒரு கட்சியா?

மாதத்துக்கு ஒரு கட்சியா?

'அடிக்கடி கட்சி மாறினால் இப்படித் தான் அசடு வழிய வேண்டியிருக்கும்...' என, கோவா அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான திகம்பர் காமத் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள். கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவரது அரசில், பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான், திகம்பர் காமத்; இவர், கோவாவின் மூத்த அரசியல்வாதி. அடிக்கடி கட்சி மாறுவதிலும் இவரை மிஞ்ச ஆள் இல்லை. ஏற்கனவே, காங்கிரசில் இருந்தபோது, 2007 - 2012 வரை கோவா முதல்வராக பதவி வகித்தார்; பின், அங்கிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் ஐக்கியமானார். இதுவரை இரண்டு முறை காங்கிரசுக்கும், இரண்டு முறை பா.ஜ.,வுக்கும் தாவி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர், சமீபத்தில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் இவர் பங்கேற்றார். அப்போது பேசிய காமத், 'நம் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ., வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இந்த தேர்தலில் மட்டுமல்ல... அடுத்த, 50 ஆண்டுகளுக்கு நடக்கும் எந்த தேர்தலிலும், பா.ஜ., வெற்றி பெறாது...' என, ஆவேசத்துடன் பேசினார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து சுட்டிக்காட்டியதும், 'மன்னித்து விடுங்கள்... காங்கிரஸ் என கூறுவதற்கு பதில், பா.ஜ., என வாய் தவறி சொல்லி விட்டேன்...' என, சமாளித்தார். சக அரசியல்வாதிகளோ, 'மாதத்துக்கு ஒரு கட்சியில் இருந்தால் இப்படித் தான் உளற வேண்டியிருக்கும்.. .' என கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி