மேலும் செய்திகள்
காரில் சிக்கி தொண்டர் பலி: ஜெகன் மீது வழக்கு
24-Jun-2025
'ஜால்ரா கோஷ்டிகளை நம்பி களத்தில் இறங்கியது மிகப்பெரிய தவறாகி விட்டதே...' என, தன் கட்சி நிர்வாகிகளை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின், வெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்தார், ஜெகன்மோகன் ரெட்டி. 'வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக வேறு கட்சிக்கு ஓடி விடுவர்...' என ரெட்டியிடம், அவரது விசுவாசிகள் கெஞ்சினர். இதையடுத்து, சமீபத்தில் பால்நாடு மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்தார்; காரில் வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், காரின் கதவை திறந்து, வெளியில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே வந்தார். அப்போது, தொண்டர்கள் சிலர், அவர் மீது மலர்களை துாவினர். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், எதிர்பாராத விதமாக ஜெகனின் கார் டயரில் விழுந்து பலியானார். இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து, ஜெகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 'எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம்' என, தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கலக்கம் அடைந்துள்ள ஜெகன், 'ஏற்கனவே ஊழல் வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில், இந்த வழக்கு வேறா... பேசாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கலாம்...' என, புலம்புகிறார்.
24-Jun-2025