ஐஸ் வைக்கும் ரேவந்த் ரெட்டி!
'வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு, இவர் மேற்கொள்ளும் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறதே...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டியை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அந்த மாநில மக்கள். நம் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அந்த நிறுவனங்கள் இருக்கும் வெளி நாடுகளுக்கு செல்வது வழக்கம். இதை, 'இன்ப சுற்றுலா பயணம்' என, எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது உண்டு. இந்த பயணங்களால் முதலீடுகள் வந்தனவா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த விஷயத்தில், மற்றவர்களில் இருந்து வித்தியாசப்படுகிறார். அம்மாநில தலைநகர் ஹைதராபாதில், அமெரிக்க நாட்டின் துணை துாதரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் உள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபரை கவுரவிக்கும் விதமாக, 'டொனால்டு டிரம்ப் சாலை' என, பெயர் சூட்டியுள்ளார். அதுபோல, ஹைதராபாதில், அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் கிளை அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு, 'கூகுள் அவென்யூ' என்றும், அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'மைக்ரோசாப்ட்' கிளை அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு, 'மைக்ரோசாப்ட் ஜங்ஷன்' ஆகிய பெயர்களை சூட்டவும், ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட தெலுங்கானா மக்கள், 'வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 'ஐஸ்' வைப்பதில், ரேவந்த் ரெட்டி வித்தியாசமான ஆளாக இருக்கிறாரே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.