உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / துாவானம் விடவில்லை!

துாவானம் விடவில்லை!

'திரைப்படங்களில் நடக்கும் சண்டை காட்சிகளை விட, இது சுவாரசியமாக இருக்கிறதே...' என ஆச்சரியப்படுகின்றனர், அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள். அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ.,வின் மேலிட பொறுப்பாளராக ஹிமந்த பிஸ்வ சர்மா நியமிக்கப்பட்டு இருந்தார்.அப்போது, ஹேமந்த் சோரனுக்கும், ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கும் இடையே கடுமையான அறிக்கை யுத்தம் நடந்தது. இருவரும், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி பேசினர். இந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ஆனாலும், சர்மா - சோரன் இடையிலான மோதல் தொடர்கிறது. 'அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். அவர்களது நிலைமை குறித்து ஆய்வு செய்ய, ஜார்க்கண்டில் இருந்து ஒரு குழு அனுப்பி வைக்கப்படும்...' என, சமீபத்தில் அறிவித்தார் சோரன். இதற்கு பதிலடியாக, 'நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, அதிகம் பேர் ஜார்க்கண்டிற்குள் ஊடுருவுகின்றனர்; இவர்களை சோரன் ஊக்கப்படுத்துகிறார். இது பற்றி அறிய, அசாமில் இருந்து ஒரு குழு ஜார்க்கண்டிற்கு அனுப்பி வைக்கப்படும்...' என, அறிவித்தார் சர்மா. இதைக் கேட்ட இரு மாநில மக்களும், 'மழை விட்டும், துாவானம் விடாது போலிருக்கிறதே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ