இதெல்லாம் ரொம்ப ஓவர்!
'கூட்டணியில் இருப்பதால், அவர் செய்யும் எல்லா விஷயத்தையும் ஆதரிக்க முடியுமா...' என, மஹாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனாவை சேர்ந்தவருமான ஏக்நாத் ஷிண்டே பற்றி கொந்தளிக்கின்றனர், அம்மாநில பா.ஜ.,வினர். இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, இப்போது துணை முதல்வர் பதவியே தரப்பட்டுள்ளது. ஆட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், தான் சொல்லும் வேலைகளை அதிகாரிகள் செய்வதில்லை என்றும் அதிருப்தியில் உள்ளார், ஏக்நாத் ஷிண்டே.சமீபத்தில், மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஏக்நாத் ஷிண்டேவை, மறைமுகமாக துரோகி என பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த ஷிண்டே ஆதரவாளர்கள், அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தை அடித்து நொறுக்கியதுடன், மும்பை முழுதும் வன்முறையிலும் இறங்கினர். இது, பா.ஜ.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'தனிப்பட்ட இருவருக்கு இடையிலான பிரச்னையை, மாநிலம் தழுவிய சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மாற்றுவதற்கு ஷிண்டே ஆதரவாளர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. ஆட்சியில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியை, ஷிண்டே இப்படி மறைமுகமாகக் காட்டுகிறாரா; இதெல்லாம் ரொம்ப ஓவர்...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.