| ADDED : பிப் 20, 2024 11:43 PM
'பீஹார் அரசியல் இவ்வளவு மலிவாகி போய் விட்டதே...' என கவலைப்படுகின்றனர், அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள். இங்கு, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார், நிதீஷ். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவி வகித்தார். இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென கூட்டணி மாறிய நிதீஷ், தற்போது பா.ஜ.,வுடன் கைகோர்த்து முதல்வராகிஉள்ளார். நிதீஷ் குமாரின் இந்த அரசியலை ஜீரணிக்க முடியாத தேஜஸ்வி யாதவ், சமீபத்தில் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது அவரை கடுமையாக விமர்சித்தார். துரோகி என்ற வார்த்தையை மறைமுகமாக குறிப்பிட்டு, காட்டமாக பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிதீஷ் குமார், 'என் வயதில் பாதி கூட இல்லாத ஒரு பையன், என்னை விமர்சித்து விட்டானே...' என கட்சியினரிடம் கண்களை கசக்கவே, அவர்கள் கோபம் அடைந்தனர். தேஜஸ்வி யாதவ், அரசியலுக்கு மிக இளையவர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், விளையாட்டு பொம்மைகளை வாங்கி, அவரது முகவரிக்கு அனுப்பி வருகின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத தேஜஸ்வி யாதவ், 'இளைஞர்கள் அரசியலுக்கு வரக் கூடாதா; வந்தால் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க கூடாதா; இது என்ன மாதிரியான அரசியல்...' என, புலம்புகிறார்.