பகல் கனவு பலிக்குமா?
'ஆட்சியை பிடிப்பதற்குள் இவ்வளவு அக்கப்போரா...' என, டில்லியில் உள்ள, பா.ஜ, தலைவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை பார்த்து கிண்டலடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம், 5ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.லோக்சபா தேர்தல்களில் டில்லியில் பெரும்பாலான தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றாலும், சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக ஆம் ஆத்மியிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் தோல்வி வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ள, பா.ஜ., மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த பரபரப்புக்கு இடையே, பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல்வர் யார் என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது. முன்னாள் மத்திய அமைச்சரான சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், லோக்சபா எம்.பி., மனோஜ் திவாரி உட்பட, அரை டஜன் தலைவர்கள், முதல்வர் பதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால், பா.ஜ.,வில் உள்ள அனுபவம் வாய்ந்த தலைவர்களோ, 'மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்றதும், பிரபலமான தலைவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, புதுமுகங்களை முதல்வராக்கியது கட்சி மேலிடம். 'டில்லியில் ஆட்சியை பிடித்தாலும், அது தான் நடக்கப் போகிறது. இது தெரியாமல், இவர்கள் பகல் கனவு காண்கின்றனர்...' என, கிண்டலடிக்கின்றனர்.