மேலும் செய்திகள்
வெந்த புண்ணில் வேல்!
27-Jun-2026
'வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதே...' என்ற குழப்பத்தில் உள்ளனர், கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள். கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. காங்., மூத்த தலைவரான சித்தராமையாவிடம் இருந்து, இரண்டு மாதங்களுக்கு முன் தான், முதல்வர் பதவியை போராடி பெற்றார், சிவகுமார். இப்போது மீண்டும் அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநில காங்., மூத்த தலைவர்களில் ஒருவர், சதீஷ் ஜார்கிஹோளி. தற்போது மாநில பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ளார். இவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தின் ஆதரவு இருப்பதால், எப்படியாவது முதல்வர் பதவியை பெற்று விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இருப்பதால், வெளிப்படையாக தன் ஆசையை தெரிவிப்பதில், அவருக்கு சிரமம் உள்ளது. இதனால், தன் மகளும், காங்., லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா ஜார்கிஹோளியை, தன் சார்பில் களத்தில் இறக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். பிரியங்கா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'என் தந்தை சதீஷ் ஜார்கிஹோளி முதல்வராக வேண்டும். மக்களின் ஆசியும், ஆதரவும் அவருக்கு உண்டு...' என்றார். சிவகுமார் தரப்பினரோ, 'முதல்வராகும் ஆசை சதீஷ் ஜார்கிஹோளிக்கு உள்ளதோ, இல்லையோ... அவரை முதல்வராக்கி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை, அவரது மகளுக்கு நிறையவே உள்ளது...' என புலம்புகின்றனர்.
27-Jun-2026