பங்காளி சண்டை ஓயுமா?
'இவருக்கு வாய் தான் எதிரி...' என, ஆந்திராவின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள மக்கள். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், 2014ல் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உதயமானது. ஆனாலும், பல முக்கிய பிரச்னைகளில், இந்த இரு மாநிலங்களுக்கும் இடையில் மோதல் தொடர்கிறது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், துணை முதல்வராக உள்ளார்; தீவிர அரசியலுக்கு வந்தாலும், தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் சமீபகாலமாக கருகி, சிதைந்து வருகின்றன. இவை குறித்து பவன் கல்யாண் கூறுகையில், 'தெலுங்கானா மாநிலத்தில் உள்ளவர்களின் வயிற் றெரிச்சல் காரணமாகவே, தென்னை மரங்கள் சிதைந்து வருகின்றன...' என்றார். இதனால், கடுப்பான தெலுங்கானா காங்கிரஸ் அரசின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'தென்னை மரங்கள் சிதைவதற்கு, பூச்சி தாக்குதல், கடல் நீர் அரிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன. 'துணை முதல்வராக பதவி வகிப்பவருக்கு இது கூடவா தெரியாது. எங்கள் மாநில மக்களை பற்றி அவதுாறாக பேசினால், இனி, தெலுங்கானாவில் பவன் கல்யாணின் திரைப்படங்கள் திரையிட முடியாத சூழல் உருவாகும்...' என எச்சரித்துள்ளார். 'இந்த பங்காளி சண்டை எப்போது ஓயுமோ...?' என புலம்புகின்றனர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள்.