அறிவியல் ஆயிரம்
விவசாயக் காலம்
தமிழகத்தில், நடவு வேலைகள் துவங்கி விட்டன. இப்போது நடப்படும் நடவு, 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில், 60 நாட்களில் பலன் தரக்கூடிய 'ஷாஸ்திக்' என்னும் நெல் ரகத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. அந்த நெல் ரகமே, இப்போது 'சாத்தி' என்ற பெயரில் உள்ளது.அரிசிக்கு, வெவ்வேறு மொழிகளில் வழங்கும் பெயர்களை வைத்து, அது எங்கு தோன்றி எங்கெல்லாம் பரவியது என அறியலாம். லத்தீன் மொழியில் அரிசிக்கு வழங்கும் 'ஒரைஸா' என்ற சொல்லும், ஆங்கிலத்தில் 'ரைஸ்' என்ற சொல்லுக்கு, மூல காரணப் பெயர் தமிழ்ச் சொல்லான 'அரிசி' என்பதாகும்.புத்த சமயத்தில் கவுதம புத்தரின் தந்தை பெயர் சுத்தோதனர் என்பதாகும். சுத்தோதனர் என்றால் 'பரிசுத்தமான அரிசி' என்று பொருளாகும். சீனாவில் நெல் நடவைச் சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் விவசாயத் திருவிழா நடக்கிறது.
தகவல் சுரங்கம்
ஆடைகளுக்கான அருங்காட்சியகம்
இந்தியாவில் துணி உற்பத்தி, ஆடை கலாசாரம் பல நூற்றாண்டு கால பாரம்பரியம் உடையது. இந்தியாவில் துணி உற்பத்தி, பருத்தி துணியில் இருந்து துவங்கியது. இந்தியாவில் துணி உற்பத்தி சாதனைகளையும், அதன் வரலாற்றையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், 'ஆடைகளுக்கான அருங்காட்சியகம்' ஆமதா பாத்தில் செயல்பட்டு வருகிறது. குஜராத்தின் ஆமதாபாத் ஆடை தொழில்களுக்கு ஏற்ற நகரம் என்பதால், இந்த அருங்காட்சியகம் அங்கே துவங்கப்பட்டது. விடுதலை அடைந்தவுடன் 1949லேயே இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. சாராபாய் அறக்கட்டளை இந்த அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் வன்முறைச் செயல்கள் எதுவும் இடம் பெறாமல் நடைபெற்ற துணி ஆலைத் தொழிலாளர் சத்யாகிரகம் ஆமதாபாத்தில் தான் நடந்தது. அப்போது அம்பாலால் சாராபாய் என்பவரை எதிர்த்து தான் அந்த சத்யாகிரகம் நடந்தது. இருதரப்பிற்கும் வெற்றியாக வித்தியாசமான முறையில் அந்தப் போராட்டம் நிறைவு பெற்றது. அந்த அம்பாலால் சாராபாய் அறக்கட்டளை நிறுவனமே, இந்த அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறது.