மேலும் செய்திகள்
உதயநிதிக்கு அரசு டாக்டர்கள் வேண்டுகோள்
27-Nov-2025
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். (குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்) என்ற குறளுக்கேற்ப தினமலர் தனது கடமையை செவ்வனே செய்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த 1996 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்து தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்ற போது, தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பத்திரிகைகள் தான் உண்மையான எதிர்கட்சி என தெரிவித்ததை, நினைத்து பார்க்கிறேன். அந்த வகையில், இன்று, தினமலர் உண்மையில் பொறுப்புள்ள சிறந்த எதிர்கட்சியாக தன் கடமையை செய்து வருகிறது என்றால் அது மிகையல்ல. அரசியல் செய்திகளை 'என் வழி தனி வழி' என்று சொல்லப்படும் வகையில், மிகுந்த ரசனையுடனும், நகைச்சுவை சித்திரத்துடனும் தினமலர் தருவது குறிப்பிடத்தக்கது. அரசின் தவறுகளை துணிச்சலாகவும், ஆதாரத்துடனும் செய்திகளாக வெளியிடுவது மட்டுமன்றி, தலையங்கமாகவும் வெளியிடுவது, ஜனநாயக தூண்களில் ஒன்று என்ற வகையில் தினமலர் பத்திரிகை தர்மத்தையும், கடமையையும் சரியாக செய்து வருகிறது என்பதை காட்டுகிறது. தினமலரில் எந்த பகுதியாக இருந்தாலும், அதில் வெளியாகும் செய்திகள் பேசுபொருளாக ஆகிவிடுகிறன. சுகாதாரத் துறையில் நிகழ்த்தப்படும் சாதனைகள் குறித்து அவ்வப்போது செய்தி வெளியிடுவதோடு, இந்த துறையில் உள்ள குறைகளை தவறாமல் சுட்டிக் காட்டி வருகிறது. அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளான; (1) அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்கள் அதிகரிக்க வேண்டும், (2) அரசு மருத்துவர்களுக்கு முதல்வர் வாக்குறுதியளித்தவாறு அரசாணை 354 ன் படி ஊதியம் வழங்க வேண்டும், போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்திகள் வெளியிடுவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் அரசு டாக்டர்கள் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, காலில் கொப்பளத்துடன் மேற்கொண்ட பாதயாத்திரை குறித்து, செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவர்களின் போராட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டதை மருத்துவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வந்தவன் என்ற வகையில், அங்கு பெரும்பாலானோர் தினமும் காலையில் எழுந்தவுடன் வாசிக்கும் பத்திரிகை தினமலர். தரமான செய்திகள் + தரமான காகிதம் என்றால் தினமலர் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். முதன்முதலில் இந்த பத்திரிகை திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்ட போதிலும், அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டி நடந்த போராட்டத்தின் போது, உறுதுணையாக இருந்ததை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. தொடர்ந்து தேசிய சிந்தனையும், தமிழ்நாட்டின் நலனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதில் உறுதியுடன் 75 ஆண்டுகளை கடந்து வீர நடை போடும் தினமலருக்கு பவள விழா வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பல நூறு ஆண்டுகள் சாதனை படைத்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை தலைவர், அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு
27-Nov-2025