மேலும் செய்திகள்
'தினமலர்' எனது தமிழ் ஆசிரியர்
16-Oct-2025
பெருமைக்குரிய, 'தினமலர்' நாளிதழ் மலர்ந்த தமிழகத்தின் தென் பகுதியில் தான் நானும் பிறந்தேன் என்று சொல்லுவதில் எனக்கு இரட்டிப்பு பெருமையாக இருக்கிறது. நான் மாணவனாய் இருந்த காலத்தில் அன்றைய எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு தேர்ச்சி பெறுவதற்கு உந்துதலாய் இருந்தது அன்றைய 'தினமலர்' வெளியிட்ட மாணவர்களுக்கான வினா, விடை பகுதிதான்! இடை விடாமல் படித்து முடித்தேன்! 'அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம்செழித்திட ஊற்றி ஊற்றி'என்பதற்கேற்ப, செய்தியானாலும் சரி, கட்டுரையானாலும் சரி எளிய தமிழில், எல்லோருக்கும் புரியும் வகையில், புதுமையான வார்த்தை கட்டோடு, செய்திகளை சொல்லி, மக்கள் எண்ணங்களை செழுமைப்படுத்தி வரும், 'தினமலர்' நாளிதழுக்கு இணை, 'தினமலர்' நாளிதழே! பார்த்தால் வெறும் காகிதம், படித்தால் ஓர் அறிவாயுதம்!தமிழகத்தில் விடியும் காலை பொழுதில், ஒவ்வொரு வீட்டிலும், மலரும் தாமரை, 'தினமலர்' நாளிதழ்! தாமரை மலரை இலட்சினையாக கொண்ட, 'தினமலர்' எத்தனையோ எதிர்வினைகளை கண்ட போதும், உறுதியாக நின்று, தேச பணியை தொடர்ந்து ஆற்றி வருகிறது. ஆக, நம், 'தினமலரை' எதையும் தாங்கும் ஒரு, 'இரும்பு மலர்' என்று கூட சொல்லலாம். அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்வருமான மரியாதைக்கு உரிய எம்.ஜி.ஆர்., அவர்கள் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட போது, அந்த அநீதிக்கு நீதி கேட்டு மக்களோடு மக்களாக நின்றது நமது, 'தினமலர்'.பத்திரிகை பலம் இல்லாத அன்றைய அ.தி.மு.க.,விற்கு பெரும்பலமாக நின்றது, 'தினமலர்'. அத்தோடு மட்டுமல்லாமல் அன்றைய அரசியல் அதிரடியான மாற்றத்திற்கு அடிநாதமாய் விளங்கியதும், 'தினமலர்' தான் என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.1973ம் ஆண்டு மே திங்கள், 21ம் நாள் தி.மு.க.,வை சேர்ந்த கூடலுார் ராஜாங்கம் என்ற பார்லிமென்ட் உறுப்பினர் திடீர் மரணம் அடைந்ததால், திண்டுக்கல் பார்லிமென்ட் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்பொழுது, அ.தி.மு.க., ஆறு மாத குழந்தையாய் இருந்தது. அ.தி.மு.க., சந்தித்த முதல் தேர்தல் அது, பத்திரிகை பலமில்லை, பகைகளுக்கு ஒரு எல்லை இல்லை, அந்நேரம் அ.தி.மு.க.,வை அன்னையாய் இருந்து ஆதரவு கரம் நீட்டி அரவணைத்து வெற்றிக்கு அடித்தளமாய் இருந்தது நமது, 'தினமலர்'நான் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் நடந்த போக்குவரத்து துறை வேலைநிறுத்தத்தின் போது, எனக்கு உடனிருந்து, ஒத்துழைப்பு தந்தது, 'தினமலர்' நாளிதழ் என்பதை என் வாழ்நாளில் மறக்க முடியாதது.கல்வி, ஆன்மீகம், விஞ்ஞானம், விளையாட்டு உள்ளிட்ட அத்தனை துறைகளிலும் ஆழ்ந்தெடுத்த பிரத்யேகமான கட்டுரைகளை அள்ளி, அள்ளி கொடுத்து சாதனைகளை படைத்து வருகிறது 'தினமலர்'. நம் பண்பாடு, கலா்சாரத்தை காத்து நிற்கும் காவலனாய், தமிழ் மண்ணின் புகழ்பாடும் பாவலனாய் வலம் வரும், 'தினமலர்' தனது, 75வது ஆண்டு பவள விழா காணும் செய்தி அறிந்தேன். மனமகிழ்ந்தேன்.இந்த பொன்னான நேரத்தில், 'தினமலர்' நிர்வாகத்திற்கும், ஆசிரியர் குழுவினருக்கும் என் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். தேசியப் பணியிலும், தெய்வீகப் பணியிலும் பல நுாற்றாண்டு காலம் சேவை செய்து, 'தினமலர்' பாரதமெங்கும் தேசிய மணம் தொடர்ந்து பரப்ப வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன். என்றும் தாயக பணியில்,நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தலைவர், தமிழக பா.ஜ., சட்டசபை பா.ஜ., குழு தலைவர்
16-Oct-2025