தினமலர் - பட்டம் இதழ் சார்பில் வினாடி - -வினா விவேகானந்தா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்
பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் -- பரிசை வெல்' மெகா வினாடி --- வினா போட்டி, பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி -- -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். அவ்வகையில், பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதிச்சுற்றில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'சி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற, 9ம் வகுப்பு மாணவி தீக் ஷா, 8ம் வகுப்பு மாணவி மதுமித்ரா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மாணிக்கம் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, ஆசிரியர்கள் கவுரிசங்கரி, சுரேஷ் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். உறுதுணையான 'பட்டம்' பள்ளி முதல்வர் மாணிக்கம் பழனிசாமி கூறுகையில், ''படைப்பாற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தோடு 'தினமலர் - பட்டம்' இதழ், மாணவர்களின் மனதில் மிகச் சிறந்த மாற்றத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் பயிலும் வகையில் வழங்கப்பட்ட வண்ணப்படங்களுடன் உள்ள கருத்துகள் கவனத்தை ஈர்க்கிறது. தேடலின் தேவையை அதிகப்படுத்துகிறது. இயல்பான விரும்பி கற்றலை, பட்டம் இதழ் ஊக்குவிக்கிறது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பட்டம் இதழ் உறுதுணையாக உள்ளது.
மாணவர்களின் வழிகாட்டி!
மாணவி தீக் ஷா: 'பட்டம்' இதழ் செய்திகளை மட்டுமல்ல, மாணவர்களின் தேடல்களுக்கும் பல வித தகவல்களை வழங்குகிறது. உலக செய்திகளை உள்ளங்கைகளில் பெறும்போது, எங்கள் மனம் களிப்புடன் கற்க விழைகிறது. 'பட்டம்' இதழ் அறிவின் வழிக்கு ஒளி விளக்கு.தமிழ் வாசிப்புக்கு பெரிதும் துணையாக உள்ளது. மாணவி மதுமித்ரா: 'பட்டம்' இதழ் வாசிப்பு, மாணவர்களுக்கு பொது அறிவை தருகிறது. மாணவர்களின் வாசிப்பு திறன் மேம் பட்டுள்ளது. பல சந்தேகங்களின் தீர்வாகவும், ஆச்சர்யங்களின் அணிவகுப்பாகவும் 'பட்டம்' இதழ் உள்ளது. தொடர்ந்து 'பட்டம்' இதழ் படித்தால், மாணவர்களின் எதிர்கால கல்விக்கு வழிகாட்டியாக இருக்கும்.