தினமலர் செய்தி எதிரொலி ஆற்றில் மணல் கடத்திய வாகனம் பறிமுதல்; மூவர் கைது
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில் பாகசாலை பகுதியில் பாயும் கொசஸ்தலையாற்று பகுதியில் மணல் கொள்ளை அதிகரித்து உள்ளது. குறிப்பாக தைலம் தோப்பு உள்ள ஒரத்தூர் -- பாகசாலை இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில், எல்.வி.புரம், ஓரத்தூர், பாகசாலை, மணவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், 'பொலிரோ' கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக இரவில் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.இவர்கள் வாகனங்கள் வாயிலாக சேகரிக்கும் ஆற்று மணலை ஓரிடத்தில் பதுக்கி வைத்து பின் டிராக்டர் வாயிலாக தேவையான இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.இதுகுறித்த செய்தி நம் நாளதழில் வெளியானதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட அரக்கோணம் தாலுகா போளூர் கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் ஜாக், 41, திருவள்ளூர் அடுத்த, நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சுனில், 28, பட்டரைப்பெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த முத்து, 42, ஆகிய மூன்று பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.