| ADDED : டிச 28, 2025 06:06 AM
திருப்போரூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், திருப்போரூரில் சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, 10 அடி இடைவெளி விட்டு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. திருப்போரூர் பேரூராட்சி சமூகநலக்கூடம் அருகே ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி காலியிடம் உள்ளது. இங்கு மாலை நேரத்தில், 10க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அமைக்கப்படுகின்றன. சில கடைகள், சாலையோர நடைபாதையிலும் அமைக்கப்பட்டன. இந்த கடைகளுக்கு வரும் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், தங்களின் பைக், கார் போன்ற வாகனங்களை சாலையில் இடையூறாக நிறுத்திவிட்டு, கடையில் பொருட்கள் வாங்குகின்றனர். இதனால், அந்த வழியாக நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், காய்கறிகளை சாப்பிட வரும் கால்நடைகளை வியாபாரிகள் துரத்தும் போது, அவை சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகத்தினர், மேற்கண்ட சாலையோர கடைகளை அப்புறப்படுத்தி, சாலையிலிருந்து 10 அடிக்கு இடைவெளி விட்டு அமைக்க நடவடிக்கை எடுத்தனர். அந்த இடத்தை 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக சீரமைத்து, தடுப்பு கயிறு கட்டியுள்ளனர். மேலும், கயிறை தாண்டி கடை அமைக்கக் கூடாது எனவும், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.