செய்யூர் அரசு மருத்துவமனையில் இருக்கைகள் அமைப்பு
செய்யூர்:செய்யூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இருக்கைகள் வசதி ஏற்படுத்த வேண்டும் என, நம் நாளிதழில் வெளியிட்ட செய்தி எதிரொலியாக இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. செய்யூர் பஜார் வீதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இது நல்லுார், புத்துார், ஓணம்பாக்கம், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, தேவராஜபுரம், அம்மனுார் என 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாகும். இங்கு புறநோயாளிகள், அவசர சிகிச்சை மற்றும் பார்வையாளர்கள் என தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பார்வையாளர்கள் ஓய்வெடுப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் ஓய்வு அறை கட்டப்பட்டது, இதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஓய்வு அறையில் இருக்கைகள் வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் புறநோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களின் கீழ் தரையில் அமரும் அவல நிலை இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக குடிநீர் தொட்டி அருகே பார்வையாளர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.