சர்வீஸ் சாலை சீரமைப்பு பணி துவங்கியது
விக்கிரவாண்டி: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் சர்வீஸ் சாலை சீரமைப்பு பணி துவங்கியது. விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் கூடுதல் மேம்பாலம் அமைக்க நகாய் திட்டமிட்டு, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தேவகோட்டையை சேர்ந்த மீனாள் அண்ட் கோ நிறுவனத்தார் இப்பணியை செய்து வருகின்றனர். இதற்காக கடந்த ஆண்டு போடப்பட்ட சர்வீஸ் சாலை மழையால் சேதமடைந்திருப்பது குறித்தும் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் கடந்த 22ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நகாய் திட்ட இயக்குநர் வரதராஜன் அறிவுறுத்தலின் பேரில், நேற்று சர்வீஸ் சாலையை சீரமைக்கும் பணி துவங்கியது. தற்போது, மழை தொடர்ந்து பெய்து வருவதால் சர்வீஸ் சாலையை தற்காலிகமாக சீரமைத்து பயன்பாட்டிற்கு தார் சாலை அமைத்து வழி செய்யப்படும். பின், மேம்பால பணிகள் முடிந்த பிறகு சர்வீஸ் சாலைக்கு நிரந்தர சாலை போடப்படும் என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.