உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: நான் என்றைக்குமே முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை. ஆனால், கட்சி தொண்டர்கள் ஆசையை வெளிப்படுத்தி இருக்கலாம். அது, அவர்களின் உரிமை; அதை மறுக்க முடியாது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமையும். காமராஜர் அரிச்சுவடியுடன் ஆட்சி அமைவதற்கு, அரசியல் சூழ்நிலை பிரகாசமாக இருக்கிறது.டவுட் தனபாலு: பிரதமர் வழிகாட்டுதலுடன், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க அண்ணாமலை படாதபாடு பட்டுட்டு இருக்காரே... அதனால, உங்களது காமராஜர் ஆட்சி கனவுக்கு, அவங்க உறுதுணையா இருப்பாங்களா என்பது, 'டவுட்' தான்!வேலுார் தொகுதி, பா.ஜ., கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான, ஏ.சி.சண்முகம்: காங்., ஆட்சி காலத்தில் தான், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது, சீனாவின் நீர்மூழ்கி கப்பல், கச்சத்தீவில் வந்து நிற்கிறது; இந்தியாவை வேவு பார்க்கிறது. இந்திய, இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதால், இந்த விஷயத்தை வெளியே கொண்டு வர இதுவே சரியான நேரம் என இந்தியா கருதுகிறது. மூன்றாவது முறையாக, மோடி பிரதமராக வரும் போது, நிச்சயமாக, கச்சத்தீவை மீட்பார்.டவுட் தனபாலு: 'கச்சத்தீவு பிரச்னையை இப்ப ஏன், பா.ஜ., கிளப்புது' என்ற கேள்விக்கு, அந்த கட்சியினரை விட இவர், 'லாஜிக்'கா விளக்கம் தர்றாரே... வேலுார்ல இந்த முறை இவர் ஜெயிச்சிட்டார்னா, மத்திய, பா.ஜ., அரசுல அமைச்சர் பதவி உறுதி என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு வேலைகளில் சரி பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்; ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என தேர்தல் அறிக்கையில் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. டவுட் தனபாலு: மத்தியில் ஆட்சியை பிடிக்கிறது இருக்கட்டும்... இப்ப, காங்., ஆட்சியில இருக்கிற கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசங்கள்ல முதல்ல இந்த வாக்குறுதிகளை, 'டிரெய்லர்' மாதிரி நிறைவேற்றி இருக்கலாமே... அப்படி செஞ்சுட்டு வாக்குறுதி தந்திருந்தால், 'டவுட்'டே இல்லாம காங்கிரசை மக்கள் நம்பியிருப்பாங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 08, 2024 08:12

பெண்கள் மீது வன்முறை, மான பங்கம் எல்லாம் உச்ச நிலையில் உள்ள மணிப்பூர் ஒன்றே சான்று இவர்கள் பெண்களுக்கு அளிக்கும் மதிப்பு, மரியாதைக்கு இதில் அரசு வேலையில் சரிபாதியாம் அள்ளி விடுவதற்கும் கணக்கு வேண்டாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை