மக்கள் உரிமை காக்கும் கட்சி தலைவரான நடிகர் கார்த்திக்: இந்தியர்களுக்கு யார் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடக்கிறது. நம் நாடு திராவிட நாடு, இந்தியாவில் தான் உள்ளது. நீங்கள் எங்களை பிரிக்க நினைக்கிறீர்கள். வேண்டாம்... நாங்கள் ஒன்று சேர்ந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.டவுட் தனபாலு: போன சட்டசபை தேர்தலப்ப உங்களை பார்த்தது... மூணு வருஷம் கழிச்சு தான், திரும்பி வந்திருக்கீங்க... இனியாவது, அரசியல் களத்துல தொடர்ந்து செயல்படுவீங்களா அல்லது 2026 சட்டசபை தேர்தல் வரை, 'ரெஸ்ட்' எடுக்க போயிடுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நம் பிரசார பொதுக்கூட்டத்தை பார்த்தால், மாநாடு போல உள்ளது. மக்கள் நம் பக்கம் இருக்கின்றனர். நியாயம், தர்மம் எங்கே இருக்கிறதோ, அங்கு தான் மக்கள் இருப்பர். தேர்தலில் வெற்றி நம் பக்கம் உள்ளது.டவுட் தனபாலு: நல்லா உத்து பாருங்க... உங்க முன்னாடி உட்கார்ந்திருக்கிற கூட்டத்துல பாதிக்கும் மேற்பட்டவங்க, நாளைக்கு, முதல்வர் ஸ்டாலின் கூட்டத்துலயும் உட்கார்ந்திருப்பாங்க... எல்லாரும், 'பேக்கேஜ்' பேசி அழைத்து வரப்படும் கூட்டம்... இந்த கூட்டம் எல்லாம் ஓட்டுகளா மாறும்னு நினைச்சா, உங்க கணக்கு தப்பாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கருணாநிதி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவர் மகன், காலை உணவை கொண்டு வந்தார். பள்ளியில் இரு வேளை உணவு கொடுக்கிறோம். இரவு, சப்பாத்தி போட்டால் என்ன என்று நானும், ஸ்டாலினும் பேசிக் கொண்டிருந்தோம். அதுவும் சீக்கிரமே நடக்கும். அதனால், மக்களே நீங்கள் பெத்து போடுற வேலையை பாருங்க; நாங்க உணவு போடுற வேலையை பார்த்துக்குறோம்.டவுட் தனபாலு: மக்களை மட்டம் தட்டுறதே உங்க கட்சியினருக்கு வாடிக்கையா போயிடுச்சு. அது சரி... மக்கள் வரிப்பணத்துல தானே மாணவர்களுக்கு சோறு போடுறீங்க... ஏதோ, தி.மு.க., அறக்கட்டளை பணத்துல போடுற மாதிரி, 'பில்டப்' கொடுக்கணுமா என்ற, 'டவுட்' எழுதே!