தமிழக பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன்: சென்னை தாம்பரத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை, 'டார்கெட்' செய்கின்றனர். இது, அரசியல் சூழ்ச்சி. தேர்தல் அதிகாரிகளால், தமிழகம் முழுதும் வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களிடம் இருந்து, 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், 4 கோடி ரூபாய் பிடிபட்டதில், என் பெயரை பயன்படுத்துகின்றனர். அந்த பணம், என்னுடையது அல்ல.டவுட் தனபாலு: 200 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்தவங்களை விட்டுட்டு, வெறும் 4 கோடி ரூபாய்க்காக என்னை கார்னர் பண்றது சரியான்னு கேட்குறீங்களா... அது சரி... மற்ற இடங்கள்ல கோடி கணக்குல பறிமுதல் பண்ணா பாய்ந்தடித்து ஓடி வரும் வருமானவரி துறையும், அமலாக்க துறையும் இந்த 4 கோடி விவகாரத்தை மட்டும் ஓரமா நின்று வேடிக்கை பார்ப்பது பல, 'டவுட்'களை கிளப்புதே!பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரிசி கடத்தல் நடக்கிறது. அதை தடுத்தாக வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து, கனிமவள கடத்தல் நடந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல், மண்ணோடு மண்ணாகி விடும். மலையையே கடத்துகின்றனர்; அரிசி கடத்தல் பெரிதல்ல.டவுட் தனபாலு: பெரும்பாலும் கேரளாவுக்கு தான் தமிழக அரிசியை கடத்துறாங்க... மலையை கடந்து கடத்துறதுக்கு சிரமமா இருப்பதால தான், மலையை மொட்டை அடிச்சுட்டு இருக்காங்களோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?-தமிழக மகளிர் காங்., தலைவர் ஹசீனா சையத்: காங்கிரஸ் ஆட்சி நடந்த 60 ஆண்டுகளில், பெண்களின் தாலியை களவாடி ஆட்சி நடத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக, தாலி அடகு கடைகளில் வைக்கப்பட்டது தான் பா.ஜ., ஆட்சியின் சாதனை. தாலிக்கு நியாயம் கேட்டு மாவட்ட வாரியாக மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தும்.டவுட் தனபாலு: பிரசார களத்தில், காங்கிரசின் சாதனைகள்னு எதையும் சொல்லி ஓட்டு கேட்க முடியாம தவிச்சிட்டு இருந்தீங்க... வெறும் வாயை மென்ற தங்களுக்கு, தாலி சென்டிமென்ட் அவலா சிக்கிடுச்சு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!