தென்சென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை: தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய எனக்கு, அங்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம்இருப்பதால், பிரசாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன். சென்னையில் இருந்து சார்மினார் எக்ஸ்பிரசில் பயணம் செய்து, தெலுங்கானா வந்திருக்கிறேன். ரயிலிலேயே அம்மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொண்டேன்.டவுட் தனபாலு: அப்படியே, உங்க பழைய எதிரியான அம்மாநில, 'மாஜி' முதல்வர் சந்திரசேகர ராவையும் பார்த்துட்டு வாங்க... பாவம் மனுஷன், தேர்தல்ல தோற்று, கால்ல அடிபட்டு, மகளும் ஜெயிலுக்கு போய் நொந்து நுாலாகி கிடக்கிறார்... அவரை பார்த்து ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்தால், 'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்' என்ற குறளுக்கு உதாரணமா இருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்: எங்கள் கட்சியில், மூடிய கதவுகளுக்கு பின்னால் இரண்டு பேரால் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவதில்லை. கட்சியின் தேர்தல் கமிட்டி பரிந்துரைகளின்படி, வேட்பாளர்களை கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார். அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க, அவருக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது.டவுட் தனபாலு: காங்கிரஸ்ல, கார்கேவுக்கு தான் அனைத்து அதிகாரமும் என்பதை, அவரது வீட்டு வேலைக்காரங்க கூட நம்புவாங்களா என்பது, 'டவுட்' தான்... அதுலயும் அமேதி, ரேபரேலி வேட்பாளர் தேர்வில் கார்கே வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து, சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு, ஓட்டு பெற்றுத்தர வேண்டும்.டவுட் தனபாலு: லோக்சபா தேர்தல் மாதிரி அசால்டா இருந்துட்டு, கடைசி நேரத்துல, 'பா.ஜ., ஆதரவாளர் ஓட்டுகளை எல்லாம் நீக்கிட்டாங்க'ன்னு புலம்பி புண்ணியம் இல்லை... இப்பவே, களம் இறங்கினால் தான், தமிழகத்தில் தாமரை மலரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!