தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கள்ளக்குறிச்சியில். தி.மு.க., உடந்தையோடு கள்ளச்சாராய வியாபாரம் நடப்பதாக, மக்கள் கூறுகின்றனர். இதை சட்டசபையில் பேச விடாமல், தி.மு.க., தடுக்கிறது. பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும் என ராகுல் கூறியதும், தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆராவாரம் செய்தனர். இங்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவதை தடுக்கின்றனர். அங்கு ஒரு நீதி, இங்கு ஒரு நீதியா?டவுட் தனபாலு: ஆளுங்கட்சியாக இருந்தால் ஒரு நியாயம்; எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நியாயம் என்பது தி.மு.க.,வின் எழுதப்படாத சட்டம் என்பது இவருக்கு தெரியாதோ என்ற, 'டவுட்'தான் வருது!பத்திரிகை செய்தி: சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம், வேளச்சேரி விஜயநகரில் நடந்தது. ஏற்பாடுகளை, 176வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் செய்திருந்தார். கூட்டம் சேரவும், இடையில் யாரும் எழுந்து செல்லாமல் இருக்கவும், கூட்டத்துக்கு வந்தவர்கள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேர்கள் அவர்களுக்கே சொந்தம் என அறிவிப்பு வெளியிட்டு முன்கூட்டியே டோக்கனும் வழங்கினார். இதனால், கட்சியினரும், அக்கம் பக்கத்தினரும் திரண்டு வந்து, சேர்களை பிடித்து உட்கார்ந்து கொண்டனர். கொஞ்ச நேரத்தில், அரங்கம், 'ஹவுஸ்புல்' ஆனது.டவுட் தனபாலு: 'உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்பது போல, உட்கார்ந்தவனுக்கே சேர் சொந்தம்' என்ற இந்த புதுமையான ஐடியாவை அமல்படுத்திய கவுன்சிலரின் அரசியல் எதிர்காலம், இன்னும் ஆனந்தமா இருக்கும் என்பதில்,'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 64 பேர் இறந்துள்ளனர்; பலருக்கு கண் பார்வை போய் விட்டது. இதுகுறித்து, சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை. தி.மு.க., ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை. சட்டசபையில் சுதந்திரமாக பேச முடிய வில்லை. அரசை குறை கூறினால் நீக்குகின்றனர்.டவுட் தனபாலு: சட்டசபையில் பேச முடியாட்டி என்ன...? அதையும் சேர்த்து மக்கள் மன்றத்தில் பேசுங்க... உங்க தலைவி ஜெ.,யும் இதையே தான் செய்து, அ.தி.மு.க.,வை பலமுறை ஆட்சியில் அமர்த்தினார்... மக்கள் மன்றத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்பதில், 'டவுட்'டே வேண்டாம்!