அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: கேரளாவில், 'அமீபா' நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, மூவர் இறந்துள்ளதாக வரும் செய்திகள், கவலை அளிக்கின்றன. அசுத்தமான நீரின் வழியாக பரவும் இந்த நுண்ணுயிர் கிருமி, குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளது. தமிழகத்தில் இத்தகு பரவல்கள் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்;மக்களை காப்பதில், முதல்வர் அதிக கவனம் செலுத்த வேண்டும். டவுட் தனபாலு: இப்படித்தான், 2020ல் கொரோனா வந்தப்ப, 'அது வெளிநாட்டு நோய்... நமக்கெல்லாம் வராது'ன்னு நீங்க அலட்சியமா பதில் தந்த மாதிரி இல்லாம, இந்த பிரச்னையில் தி.மு.க., அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி, 15 மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தும், தமிழகத்தில் பா.ஜ.,வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. காரணம், அண்ணாமலை போன்ற அவசர குடுக்கைகள். 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, 19.39 சதவீதம் ஓட்டுகள் பெற்றோம். தற்போது, 40 தொகுதியில் போட்டியிட்டு, 20.46 சதவீதம் ஓட்டுகள் பெற்று, 1 சதவீதம் அதிகரித்துள்ளோம்.டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வுக்கு, 35 சதவீதம் ஓட்டு வங்கி இருந்துச்சு... அது படிப்படியா கரைஞ்சு, 19 - 20 என்று ஊசலாடிட்டு இருப்பதை, பெரிய முன்னேற்றம் மாதிரி சொல்றீங்களே... உங்க ஓட்டு வங்கியில், 'ஓசோன்' படலம் அளவுக்கு ஓட்டை விழுந்ததற்கு என்ன காரணம்னு யோசனை பண்ணலையா என்ற, 'டவுட்'தான் வருது!மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்: தமிழகத்தில் போதை கலாசாரம் தலைதுாக்கியுள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.நாட்டு மக்களுக்கு தாகம் தணிக்கும் தண்ணீரை, ஜல் ஜீவன் திட்டம் வாயிலாக, பிரதமர் மோடி வழங்கி வருகிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு டாஸ்மாக் வாயிலாக மதுவை கொடுத்து வருகிறார்.டவுட் தனபாலு: 'ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே பட்ஜெட்'னு எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்துற உங்க மத்திய அரசு, நாடு முழுதும் பூரண மதுவிலக்கு என்ற ஒரே சட்டத்தை அமல்படுத்தி, மதுபான சீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!