தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: கூட்டணி இல்லாமல், தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, வரும், 50 ஆண்டுகளுக்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பலமான கூட்டணி, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதில் கை வைப்பது, தேன் கூட்டை கலைப்பது போன்றது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமானால், முதலில் நம்மை அதற்கு தகுதி உடையவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். டவுட் தனபாலு: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றணும்னு தான், உங்க கட்சியின் இளம் தலைவர் ராகுல் போராடிட்டு இருக்காரு... அதற்கு அவருக்கு தகுதி இல்லன்னு சொல்ல வர்றீங்களா என்ற, 'டவுட்' எழுதே!சிவகங்கை தொகுதி, காங்., - எம்.பி., கார்த்தி: கார் ரேஸ் நடத்துவதால் உலக அளவில் சென்னை பிரபலமாகும். செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்திய போது, இப்படித் தான் பிரபலமானது. அதனால், சென்னையில் கார் ரேஸ் நடத்துவது தவறல்ல. தமிழக கவர்னரின் தேநீர் விருந்திற்கு, அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் சென்றார். இது, ராஜாங்க ரீதியிலானது. கட்சி சார்பில் பங்கேற்கவில்லை.டவுட் தனபாலு: சென்னையில் கார் ரேஸ் நடத்துவதை யாரும் தப்புன்னு சொல்லலையே... நகரின் மத்தியில் நடத்தாமல், ஊருக்கு வெளியில் நடத்தினால், அரசை யாரும் குறை சொல்ல மாட்டாங்களே... கூட்டணி கட்சியா இருப்பதால், ஆளுங்கட்சிக்கு நல்லாவே முட்டு கொடுக்குறீங்க என்பது மட்டும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: அ.தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா காண்கின்றனர். 'அம்மா சிமென்ட்'டை மூடிவிட்டு, 'வலிமை சிமென்ட்' என்று பெயர் மாற்றினர். தற்போது அதுவும் கிடைக்கவில்லை. 'அம்மா' உணவகத்தை படிப்படியாக மூடி வருகின்றனர். 'அம்மா' மருந்தகத்தை மூடிவிட்டு, முதல்வர் மருந்தகம் திறக்கப்படும் என்கின்றனர். டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை பாழடைய விட்டு, கடைசியாக மருத்துவமனையாக மாற்றியது, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை மூடியே வச்சிருந்தது போன்ற உங்க ஆட்சியின், 'சாதனை'களை தி.மு.க.,வினர் இன்னும் மறக்கலை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!