தமிழக சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன்: ஈ.வெ.ரா., குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். ஈ.வெ.ரா., குறித்த புத்தகங்களை இன்னும் நான் படித்ததில்லை. படித்த பிறகு தான், அது குறித்து கருத்து கூற முடியும்.டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, 'சீமான் சரியா தான் பேசியிருக்கார்'னு வக்காலத்து வாங்குறாரு... நீங்க அதை வழிமொழியாம, நழுவுறதை பார்த்தா, அ.தி.மு.க.,வுல இருந்து வந்த உங்களுக்கு பழைய திராவிட இயக்க பாசம் போகலையோ என்ற, 'டவுட்' தான் வருது!ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே ஆம் ஆத்மியின் முன்னுரிமை. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, நாங்கள் விரிவான திட்டத்தை தயாரித்து வருகிறோம். மக்களின் ஆதரவுடன் அடுத்த ஐந்தாண்டுகளில், டில்லியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம்.டவுட் தனபாலு: டில்லியில் கிட்டத்தட்ட, 10 வருஷங்களா உங்க கட்சியின் ஆட்சி தான் நடந்துட்டு இருக்கு... 'இந்த 10 வருஷத்துல இத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கோம்'னு சொல்லி ஓட்டு கேட்க உங்களால முடியலையா...? 10 வருஷமா சாதிக்காததை, அடுத்த அஞ்சு வருஷத்துல எப்படி சாதிப்பீங்க என்ற, 'டவுட்' வருதே!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: உலக அளவில், 2020ம் ஆண்டு, 4.20 லட்சம் பேர் கலப்பட உணவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே முதல், 2022ம் ஆண்டு டிசம்பர் வரை, உணவு பாதுகாப்பு துறையினர், 38,980 உணவு மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், 28 சதவீதம் மாதிரிகள், பயன்படுத்த முடியாத அல்லது தரம் இல்லாதவை என தெரிய வந்துள்ளது. டவுட் தனபாலு: அந்த 28 சதவீதம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்ட உணவகங்கள் மீது, தி.மு.க., அரசு என்ன நடவடிக்கை எடுத்துச்சு...? அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் தான், 'ஆஹா, ஓஹோ'ன்னு விளம்பரப்படுத்தி இருப்பாங்களே... அந்த உணவகங்கள் வெட்ட வேண்டிய, 'கட்டிங்'கை வெட்டிட்டு, இன்றும் இயங்கிட்டு இருக்கும் என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!