டவுட் தனபாலு
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி: எனக்கும், கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. எல்லா கட்சிகளின் விருப்பமும் அதுதான். இன்னும் தேர்தலுக்கு, 16 மாதங்கள் இருக்கின்றன. இப்போது அதுகுறித்து எதுவும் பேசத் தேவையில்லை. எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரலாம்.டவுட் தனபாலு: 'கூட்டணி ஆட்சிக்கு சம்மதிச்சால்தான், தி.மு.க., அணியில் நீடிப்போம்'னு நிபந்தனை விதிக்க, எல்லா கட்சிகளும் தயங்குவது ஏன் என்ற, 'டவுட்' வருதே... 'தப்பித்தவறி கேட்டு, வெளியில போங்கன்னு அவங்க சொல்லிட்டா, முதலுக்கே மோசம் வந்துடுமோ'ன்னு பயப்படுறீங்களா அல்லது மேலிடம் வாயே திறக்க மாட்டேங்குதேன்னு கோடிட்டு காட்டுறீங்களா என்ற, 'டவுட்' வருது! பா.ஜ.,வைச் சேர்ந்த மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங்: 'பிரதமர் மோடி மணிப்பூர் வரவில்லை' என, காங்கிரஸ் அரசியல் செய்கிறது. காங்கிரசின் கடந்த கால செயல்களால்தான் மணிப்பூர் இன்று பற்றி எரிகிறது. காங்கிரஸ் தலைவர் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதும், இங்கு இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது அவர் மணிப்பூர் வந்தாரா?டவுட் தனபாலு: அது சரி... மத்தியிலும், மாநிலத்திலும் உங்க கட்சியின் ஆட்சி இருந்தும், இனக்கலவரத்தை தடுக்க முடியாம, 30 வருஷத்துக்கு முன்னாடி ஆட்சியில இருந்த நரசிம்ம ராவை வம்புக்கு இழுப்பது முறையா என்ற, 'டவுட்' வருதே! பா.ம.க., தலைவர் அன்புமணி: ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கலெக்டர், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை, 2023 அக்டோபருக்குப் பின் நடத்தவில்லை. 'தமிழகத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடுகின்றன; மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்' என்ற பொய்யைத் தவிர, வேறு எதையும் கேட்க விரும்பாத மாய உலகில், முதல்வர் ஸ்டாலின் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். டவுட் தனபாலு: சரி விடுங்க... உங்க கனவுல, உங்க தலைமையில் பா.ம.க., ஆட்சி அமைந்த பிறகு, நிஜமாகவே தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுமே... அப்ப, தி.மு.க.,வினரே, 'அடடா... இதுதான் நல்லாட்சியா'ன்னு நினைச்சு மூக்குமேல விரலை வைப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!