இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன்: 'தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம்' என, காங்., - பா.ஜ., இரு கட்சிகளும் கூறி வந்தன; ஆனால், அதை செயல்படுத்தவில்லை. இதற்கு கால வரையறை நிர்ணயித்து, மத்திய அரசு சட்டம் இயற்றி, அதை அமல்படுத்த வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சீட்டு வாயிலாக ஓட்டளிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவில்லை.டவுட் தனபாலு: தமிழகத்துல, உங்க கட்சியின் ஆதரவுல தானே, 39 தொகுதிகள்லயும் வெற்றிக்கனியை பறிக்க பா.ஜ., திட்டமிட்டிருக்குது... அதனால, பெரிய மனசு பண்ணி, உங்க முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க... உங்க முடிவுல தான், பா.ஜ.,வின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கோடநாடு கொலை குற்றவாளிகளை கண்டறிந்து,தண்டனை பெற்று தருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இதுவரை எதுவும் செய்யவில்லை. கோடநாடு கொலை,- கொள்ளை விஷயத்தில், முதல்வர் என்ன சொன்னாரோ, அதை செய்ய வேண்டும். மக்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்ற வேண்டும். உலகத்திலேயே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்து செயல்படுவது தமிழகத்தில் தான். டவுட் தனபாலு: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த எத்தனையோ வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்குதே... அதை பற்றி கவலைப்படாம, கோடநாடு வழக்குல மட்டும் இவர் குறியாக இருப்பது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!மத்திய தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்: ஏழை குடும்பத்தில் இருந்து பிரதமர் மோடி வந்துள்ளார்; அதனால் அவருக்கு, ஏழைகள் கஷ்டம் நன்கு தெரியும். மத்திய அரசின் எல்லா திட்டங்களும் ஏழை, எளிய மக்கள் வரை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் தரப்படுகிறது. பிரதமரும் சாலையோரம் டீக்கடை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.டவுட் தனபாலு: பிரதமர் மோடி, எவ்வளவோ உயரத்துக்கு வந்த பிறகும், பழசை மறக்காமல் இருக்காரு என்பதில், மாற்றுக் கருத்துக்கே இடமில்லை... அதனால, அவரே மூன்றாவது முறையாகவும் அந்த பதவிக்கு வருவார் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!