ஆந்திராவில் செயல்படும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு: ஜெகன் மோகன் ரெட்டியின் மாநில அரசு, எங்கள் கட்சி நிர்வாகிகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முடக்க, வருவாய் புலனாய்வு அமைப்பை பயன்படுத்துகிறது. இது குறித்து, கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்.டவுட் தனபாலு: கவர்னர் என்ன செய்வார்... மனுவை வாங்கிட்டு, 'உரிய நடவடிக்கை எடுக்கிறேன்'னு சொல்லிட்டு அனுப்பிடுவார்... இன்னும் கொஞ்ச நாள் தான்... லோக்சபா தேர்தல் தேதியுடன், உங்க மாநில சட்டசபைக்கும் தேர்தல் தேதியை அறிவிச்சதும், ஜெகன்மோகன் பேச்சை எந்த அதிகாரியும் கேட்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, கோகைன், ஹெராயின் என வளர்ந்து, அனைத்து போதைப் பொருட்களும், சர்வ சாதாரணமாக புழங்கும் மாநிலமாக தமிழகத்தை, தி.மு.க., அரசு மாற்றியிருப்பது வேதனைக்குரியது.டவுட் தனபாலு: உங்க ஆட்சியில, 'குட்கா' விற்பனைக்கு பெரிய, பெரிய போலீஸ் அதிகாரிகள் துவங்கி, ஆளுங்கட்சி அமைச்சர்கள் வரைக்கும், 'படியளந்த' விவகாரம் அம்பலமானதே... அது பத்தி, தி.மு.க.,வினர் திருப்பி கேட்டா, நீங்க என்ன பதில் தருவீங்க என்ற, 'டவுட்' வருதே!பத்திரிகை செய்தி: துாத்துக்குடியில் கனிமொழி போட்டியிட அவருக்கு ஆதரவாக, 51 பேரும், பெரம்பலுார் தொகுதியில் அமைச்சர் நேருவின் மகன் அருண் போட்டியிட, 32 பேரும், சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். டவுட் தனபாலு: அது மட்டுமில்லை... அந்த தொகுதிகளுக்கு வேற யாருமே மனு தாக்கல் பண்ணவும் மாட்டாங்க... போட்டியே இல்லன்னு சொல்லி, ரெண்டு பேருக்குமே சீட் குடுத்துடுவாங்க... ஆனா, 'இது செமி பைனல்'தான்... தேர்தல் களம் எனும், 'பைனலில்'தான் இவங்களுக்கு சவால் காத்துட்டு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!