தமிழக சட்டசபை சபாநாயகர்அப்பாவு: லோக்சபா தேர்தல் அறிவிப்பிற்கும், பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் அமைச்சராக பதவியேற்ற முன் உதாரணம் உள்ளது. எனவே, இங்கும் அதேபோல பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம். அதில், சட்ட ரீதியாக எந்த பிரச்னையும் ஏற்படாது.டவுட் தனபாலு: அது சரி... லோக்சபா தேர்தல்ல, பொன்முடியின் மகனுக்கு திரும்பவும்'சீட்' தரப் போறதா தகவல்கள் வருது... அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து, மகனின் தேர்தல் பணிகளை பார்த்தால், அதற்கு தனி அந்தஸ்தும், மரியாதையும் உண்டு என்பதில்,'டவுட்'டே இல்லை!காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்: காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு ரகசியமாக திறந்து விட்டதாக பா.ஜ., கூறுவது பொய். காவிரி நீர் விவகாரத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது. அவர்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி வாங்கி தரட்டும்.டவுட் தனபாலு: காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பது, தங்களுக்கு நன்றாகவே தெரியும்... அதனாலதான், நைசா பா.ஜ., மேல பாரத்தை போட்டு நழுவுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: தமிழகத்தில், கோபி மஞ்சூரியன் வகைகள், தந்துாரி சிக்கன் வகைகள், பிரியாணி, சிவப்பு மிளகாய் உள்ளிட்டவற்றிலும், 'ரோடமைன் பி' கலப்பது, தமிழக உணவு பாதுகாப்பு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிப்பது குறித்து, உணவு பாதுகாப்புத் துறையின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.டவுட் தனபாலு: மக்கள் சாப்பிடும் உணவில் நஞ்சை கலப்பது ஆய்வுல உறுதியாகிடுச்சுன்னு சொல்றீங்க... அப்புறமும் அவற்றுக்கு உடனே தடை விதிப்பதை விட்டுட்டு, மீனம், மேஷம் எல்லாம் பார்க்கணுமா என்ற, 'டவுட்' வருதே!