பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மூன்று ஆண்டுகளுக்கு முன், என் மகன் அன்புமணி பா.ம.க., தலைவரானபோது ஆனந்தக் கண்ணீர் விட்டேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தந்தைக்கு பிறகே தனயன். அய்யாவுக்கு பின்னே அன்புமணி. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே உலகியல் நீதி; சாஸ்திர சம்பிரதாயம். நேர்மையும், தர்மமும் அது தான்.டவுட் தனபாலு: முன்னாள் முதல்வரான கருணாநிதி, 94 வயசாகியும், தன் இறுதி மூச்சு வரை தி.மு.க., தலைவர் பதவியை தன்னிடமே வச்சிருந்தாரு... அவருக்கு பின்தான் தலைவர் பதவியில் ஸ்டாலினால் அமர முடிஞ்சது... வாரிசுக்கு முடி சூடும் விஷயத்தில், நீங்க அவசரப்பட்டுட்டீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!பத்திரிகை செய்தி: 'தமிழகம் முழுதும் தி.மு.க., நிர்வாகிகள், ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக, எந்த பலனும் பெறாமல் அதிருப்தியில் உள்ளனர்' என, உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி உற்சாகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார். இதன்படி, சட்டசபை தொகுதி வாரியாக, நிர்வாகிகளை அழைத்து பேசி, அவர்களுக்கு இருக்கும் அதிருப்தியை போக்கி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.டவுட் தனபாலு: அது சரி... 'இந்த முறை நம்ம ஆட்சியில் எந்த பலனும் பெற முடியாத விரக்தியில், தேர்தல் பணியில் அசால்டா இருந்துடாதீங்க... தேர்தல்ல ஜெயித்து, தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், உங்களுக்கான பலன்கள் டபுள் மடங்கா வீடு தேடி வரும்'னு கட்சியினரை முதல்வர் உற்சாகப்படுத்தி அனுப்புறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே:
உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா நெரிசலில் உயிரிழப்புகள்
ஏற்பட்டபோது, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக
வேண்டும் என, காங்., கோரியது. அதேபோல், பெங்களூரு கிரிக்கெட் மைதான பலிகள்
விவகாரத்திலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, கர்நாடக முதல்வர்
சித்தராமையாவை ராஜினாமா செய்ய கோருவதில் என்ன தவறு?டவுட் தனபாலு:
தப்பே இல்லை... அன்று காங்., கோரிக்கையை ஏற்று, யோகி ஆதித்யநாத் பதவி
விலகலையே... அதுபோல, இப்ப பா.ஜ.,வினர் மற்றும் உங்க கோரிக்கையை ஏற்று,
சித்தராமையாவும் பதவி விலக மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!