அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கட்சிக்குள் நெருஞ்சி முள்ளாக சிலர் இருந்தனர். அவர்களை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். அவர்களாகவே தவறு செய்து, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்துக் கொண்டனர். துரோகிகளோடு கைகோர்த்த பின், அவர்களை கட்சிக்குள் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதால் தான் நீக்கி விட்டேன். ஒருவிதத்தில் இப்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளது. மேலும், பலமான கூட்டணிக்கு வேகமாக பணிகள் நடக்கின்றன. டவுட் தனபாலு: இப்படி, உங்க தலைமைக்கு எதிரா குரல் கொடுப்பவர்களை எல்லாம் அதிரடியா நீக்கிட்டா, நீங்களும் ஜெயலலிதா மாதிரி ஆகிட முடியும்னு நினைக்கிறீங்களா...? பலமான இரண்டாம் கட்ட தலைவர்களை வரிசையா வெளியேற்றும் உங்க கட்சியுடன், கூட்டணி அமைக்க எந்த கட்சியாவது முன்வருமா என்பது, 'டவுட்'தான்! தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் நல்ல அரசியல் கூட்டணி அமைய, இன்னும் காலம் இருக்கிறது. இன்றைக்கும் நான் அ.தி.மு.க.,வை பற்றி பேசவில்லை. ஆனால், அக் கட்சியைச் சேர்ந்த எத்தனையோ தலைவர்கள், என்னை திட்டிக் கொண்டு தான் உள்ளனர்; அமித் ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக உள்ளேன். எல்லாருக்கும் ஒரு எல்லை உண்டு; லட்சுமண ரேகை உண்டு. அதை கடக்கக் கூடாது என்று இருக்கிறேன். காலம் வரும்போது பேசுகிறேன். டவுட் தனபாலு: நீங்க சொல்றதை பார்த்தால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மறுபடியும் மலர்ந்ததில் உங்களுக்கு துளியும் விருப்பமில்லை என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... தமிழகத்தில், பா.ஜ.,வை தனிப் பெரும் கட்சியாக மாற்ற நினைத்த தங்களது கனவு இப்போதைக்கு நனவாவதும், 'டவுட்'தான்! பா.ம.க., தலைவர் அன்புமணி: ஒரு பகுதியில் இருந்து, 3,200 லாரிகளில் நெல் எடுத்துச் செல்ல, முருகன், கார்த்திகேயன், கந்தசாமி என, மூன்று பேரின் நிறுவனங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, டெண்டர் வழங்கி, டன்னுக்கு, 598 ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளனர். உண்மையில், 140 ரூபாய் தான் செலவு ஆகிறது. இதில் மேலோட்டமாக, 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. டவுட் தனபாலு: கடவுள் முருகன் பெயர்களையே மாத்தி மாத்தி போட்டு, ஊழல் செஞ்சிருக்காங்கன்னு சொல்றீங்களா...? சட்டத்தின் பிடியில் இருந்து அவங்க தப்பிச்சாலும், தனது பல பெயர்களை போட்டு மோசடி செய்தவங்களை, முருகன் தண்டிக்காம விட மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!