மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
18-Nov-2025
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: 'குப்பை அள்ளுவோருக்கு, குப்பை வண்டியில் சோறு போட்டால் போதும்' என்று நினைக்கிறீர்களா முதல்வரே... கோவையில் துாய்மை பணியாளர்களுக்கு, குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த தி.மு.க., அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது; துளியும் மனிதாபிமானமற்ற செயல். தி.மு.க., அரசின் அகம்பாவ போக்கை மக்கள் கவனிக்கின்றனர். வரும் தேர்தலில், வட்டியும் முதலுமாக வாங்கி கட்டிக்கொள்ள தயாராகுங்கள். டவுட் தனபாலு: சரி விடுங்க... அவங்க வட்டியும், முதலுமாக வாங்கி கட்டிக்கொள்ள போவதன் பலன் எல்லாம் உங்களுக்கு தான் லாபமா அமையும்... அதனால, இதை எல்லாம் கண்டுக்காம கமுக்கமா இருந்துட்டு, தேர்தல் நேரத்தில் எடுத்து விட்டா, உங்க அணிக்கு சாதகமா அமையும் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கட்சி துவங்கியுள்ள மல்லை சத்யா: நீதிக் கட்சி துவங்கிய நாளில், எங்கள் கட்சியை துவக்கியுள்ளோம். நடிகர் விஜய் துவக்கி இருப்பது தமிழக வெற்றிக் கழகம்; நாங்கள் துவங்கி இருப்பது திராவிட வெற்றிக் கழகம். திராவிடம் என்பது பரந்துபட்ட ஒன்று. நாடு முழுதும் உள்ள திராவிட இயக்க சக்திகளை நல்வழிப்படுத்தும் நோக்கில், கட்சிக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: திராவிட கட்சிகளை நல்வழிப்படுத்த போறோம்னா, அவங்க எல்லாம் இப்ப கெட்ட வழியில் போயிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா என்ற, 'டவுட்' வருதே... இப்படி சொல்ற உங்களை, ரெண்டு திராவிட கட்சிகளும் கூட்டணியில் சேர்த்துக்குமா என்பதும், 'டவுட்' தான்! lll அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: சமீபத்தில், 'துாய்மை பணியாளர் களுக்கு உணவு வழங்கும் திட்டம்' என்ற பெயரில், 'போட்டோ ஷூட்' நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். தற்போது, கோவையில் செம்மொழி பூங்கா ஊழியர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு எடுத்து செல்லப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. 'குப்பை வண்டியில் சாப்பாடு எடுத்து சென்று இழிவுபடுத்துவதற்கு, இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம்' என்றே, சுயமரியாதை உள்ள யாரும் சொல்வர். டவுட் தனபாலு: துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க, 186 கோடி ரூபாயை ஒதுக்கிய தமிழக அரசு, அதை எடுத்துட்டு போய் கொடுக்க, சில லட்சங்களை ஒதுக்கியிருக்கலாமே... யானை வாங்குனவங்க அங்குசம் வாங்க யோசிக்கலாமா என்ற, 'டவுட்' தான் வருது! lll
18-Nov-2025