உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ம.க., தலைவர் அன்பு மணியின் மனைவி சவுமியா: லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் போட்டியிட்ட நான் தோற்று போனேன். இருந்தாலும், தேர்தலுக்கு பின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றேன். பெண்கள்தான் எனக்கு ஆறுதல் கூறினர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, 'ஆண்கள் சரியாக ஓட்டளித்து விடுவர்; ஆனால், பெண்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விடுவர்' என, ஒரு பெண் என்னிடம் கூறினார். அந்த பெண் சொன்னதே நடந்தது; பல இடங்களில், பெண்கள் காலை வாரி விட்டனர். டவுட் தனபாலு: பெண்கள் காலை வாரிட்டதா சொல்றீங்களே... பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தில் இருந்து அன்புமணி, சவுமியான்னு வரிசையா வாரிசுகள் அணிவகுத்து வர்றதை, அந்த தொகுதி பெண்கள் விரும்பலையோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா? lll ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: 'சட்டசபை தேர்தலில், எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும்' என, கூட்டணி கட்சி தலைமையிடம் வலியுறுத்துவோம். கூட்டணி தலைமை, இந்த விஷயத்தில் நல்ல முடிவெடுக்கும். எங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் கொடுப்பர். கடந்த லோக்சபா தேர்தல் போல, வரும் சட்டசபை தேர்தலிலும், தனி சின்னத்தில் போட்டியிடவே விரும்புகிறோம். அது எங்கள் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுடைய ஆசை. டவுட் தனபாலு: 'தாராளமா தனி சின்னத்தில் போட்டியிடுங்க... அதேபோல, தேர்தல் செலவையும் நீங்களே தனியா செஞ்சுக்கணும்... தி.மு.க.,விடம் இருந்து ஒரு ரூபாய் கூட எதிர்பார்க்கக் கூடாது' என்ற நிபந்தனையை ஆளுங்கட்சி விதித்தால், ஏற்றுக் கொள்வீங்களா என்ற, 'டவுட்' வருதே! lll தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன்: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை, மத்திய அரசு தடை செய்தது போல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்; உண்மை அதுவல்ல. திட்ட அறிக்கைகளிலேயே, கடுமையான ஓட்டைகள், தடைகள் இருக்கின்றன. அதை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்நுட்ப பிழைகளை சரி செய்யாமல், அதை வைத்து, அற்ப அரசியல் செய்வதையே முதல்வர் ஸ்டாலின் தொடர்கிறார். டவுட் தனபாலு: அவர் அற்ப அரசியல் பண்றதாகவே இருக்கட்டும்... கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துட்டா, அந்த பகுதி மக்களின் ஆதரவு, வர்ற சட்டசபை தேர்தல்ல உங்க கட்சிக்கு கிடைக்குமே... இந்த யோசனையை உங்க டில்லி தலைமைக்கு நீங்க தரலையா என்ற, 'டவுட்'தான் வருது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KR india
நவ 25, 2025 19:44

மக்கள்தொகை அடர்த்தி அடிப்படையில் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் ஏற்புடையது. அது ஏற்கனவே, செயல்வடிவம் பெற்று வெற்றிகரமாக இயங்குகிறது. ஆனால், பா.ஜ.க கட்சிக்கு ஒட்டு கிடைக்குமென்ற காரணத்திற்காக, விதிமுறைகளை மீறி, தேவையில்லாமல் மதுரையிலும் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புவது ஏற்புடையதல்ல. அதுவும், மதுரைக்கு இப்போதைக்கு தேவை, நல்ல உள்கட்டமைப்பும், சென்னை, கோவையை போன்ற தொழில் நிறுவனங்களும் தான். எனினும், கோயம்புத்தூர் நகரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில், மெட்ரோ ரயில் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மெட்ரோ ரயில் அமைய வாய்ப்புண்டு.


duruvasar
நவ 25, 2025 08:13

கொடுத்தா இது ஒட்டு அரசியல் என டி கடை பெஞ்சில் பெருசுகள் பேசனும்னு உங்களுக்கு டவுட்டு வரவில்லையா ?


தலைவன்
நவ 25, 2025 11:40

வாக்கு அரசியலாகவே இருக்கட்டுமே ?? மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் என்பதுதானே?? பெரியோரின் வாக்கு?? தவறை தட்டி கேட்க வக்கில்லாமல் பேசி என்ன பயன்??


கல்யாணராமன் சு.
நவ 25, 2025 14:04

"மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் என்பதுதானே?" எது நல்லதுங்கிறீங்க ? அந்த காலத்துல பொதுத்துறை நிறுவனங்களை ஆரம்பிச்சு, அவை நஷ்டத்துல ஓடினாலும் பரவாயில்லை, தொகுதி மக்களுக்கு நிரந்தரமா வேலை உண்டு அப்படிங்கறதாலே, அவற்றை இயங்க விட்டு, மக்களின் தலையில் அந்த நஷ்டத்தை அவங்களுக்கே தெரியாம சுமத்தினாங்களே, அந்த நல்லதா? மெட்ரோ ப்ராஜெக்ட்டுக்கு தகுதியாக அந்த நகரங்கள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க வேண்டியது யாரோட பொறுப்பு? இந்த பதில் தனபாலுக்கும் சேத்துதான் ....


முக்கிய வீடியோ